×

காற்றின் சீற்றத்தால் பாம்பன் ரயில் பாலத்தின் தூணில் மோதிய மிதவை மேடை

ராமேஸ்வரம்: பாம்பனில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடை நேற்று அதிகாலை, கடல் சீற்றத்தினால் இழுத்து செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தில் மோதி சிக்கியது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. கடலுக்குள் கப்பல் செல்லும் மையப்பகுதியில் பாம்பன் கால்வாயின் இரண்டு பக்கத்திலும் மிதவை மேடை அமைத்து தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் வீசிய பலத்த காற்றினால், தூண்கள் அமைக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மிதவை மேடையுடன் கூடிய கிரேன், பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது. நேற்று அதிகாலை கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதவை மேடை ஒன்று காற்றின் சீற்றத்தில் இழுத்து செல்லப்பட்டு, தூக்குப்பால கான்கிரீட் தூணில் மோதி சிக்கியது. நேற்று காலை கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் படகில் சென்று கயிற்றினால் கட்டி, மிதவை மேடையை மீட்டு வேறு பகுதியில் இழுத்து சென்று நிறுத்தினர்.

புதிய ரயில் பால கட்டுமான பணிக்காக கடலில் நிறுத்தப்பட்டுள்ள மிதவையுடன் கூடிய இயந்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சங்கிலியால் இணைக்கப்பட்டு எவ்வித தடுப்புகளும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்றின் வேகத்தில், மிதவை மேடை இயந்திரங்கள் அருகிலுள்ள பாம்பன் ரயில் பாலத்தில் மோதி நிற்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.  பாம்பன் பாலத்தில் தற்போது சென்சார் கருவியில் பிரச்னை, அதிகளவில் அதிர்வு பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சென்று வருவதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் புயல் காலங்கள், என்பதால் புதிய பால கட்டுமான பணிக்கான தடவாள பொருட்களை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : railway bridge ,Pamban , In the wind, on the Pamban railway bridge, on the pillar floating, platform
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...